×

நெல், மக்காச்சோளம் பயிர்களை நவ.15-க்குள் காப்பீடு செய்ய வேண்டும் - அரியலூர் ஆட்சியர் தகவல்!

 

அரியலூர் மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை வரும் 15ஆம் தேதிக்குள்  பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு, ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் நெல் - II, மக்காச்சோளம் - II மற்றும் பருத்தி - II பயிர்கள் சம்பா பருவத்திலும், நெல், மக்காச்சோளம் - II, (மற்றும்) பருத்தி II பயிர்கள் குளிர் காலப்பருவத்திலும் (ராபி) அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சம்பா மற்றும் குளிர் கால பருவ நெற்பயிருக்கு வரும் 15.11.2022 தேதி வரை, மக்காச்சோளம் பயிருக்கு - 15.11.2022 வரை பருத்தி - 31.10.2022 வரை காப்பீடு செய்யலாம். காப்பீட்டு கட்டணமாக நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.564, மக்காச்சோள பயிருக்கு ரூ.310.50, பருத்திக்கு ரூ.572.87 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

எனவே சம்பா பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள் தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களில் (இ-சேவை மையங்கள்) மற்றும் தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள விவசாயிகள் கார்னரில் நேரடியாக காப்பீடு செய்யலாம்.

முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ-அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். மேற்படி பயிர்களை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்களது பயிரை காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதுகுறித்து கூடுதல் விபரங்களுக்கு www.pmfby.gov.in என்ற இணைய தளத்திலோ அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ, அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது வங்கிகளையோ அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.