×

வடமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்த எதிர்ப்பு; ஈரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சாலை மறியல்!

 

ஈரோட்டில் தனியார் போக்குவரத்து பார்சல் நிறுவனத்தில் வடமாநில தொழிலாளர்களை பணியமர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு அசோகபுரம் பவானி சாலையில் தனியார் போக்குவரத்து பார்சல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 8 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த மாதம் நிறுவனத்திற்கு வந்த லோடுகளை சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பதிலாக வடமாநில தொழிலாளர்களை வைத்து அதிகாரிகள் இறக்கியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் புகார் அளித்த நிலையில், பார்சல் நிறுவனத்தினர் 8 தொழிலாளர்களையும் வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசோ, முன் பணமோ கொடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை பார்சல் நிறுவனத்தில் வடமாநில தொழிலாளர்கள் லோடுகளை இறக்கிய நிலையில், அதற்கு சுமைத்துக்கும் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு திரண்ட 500-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிய எதிர்ப்பு தெரிவித்து திடீரென பவானி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தின்போது, தொழிலாளி ஒருவர் மீது தனியார் நிறுவன அதிகாரியின் இருசக்கர வாகனம் மோதியதால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அந்த அதிகாரியை சரமாரியாக தாக்கினார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருங்கல்பாளையம் போலீசார், தொழிலாளர்களை சமாதானப்படுத்தி அதிகாரியை மீட்டனர். தொடர்ந்து, போக்குவரத்து பார்சல் நிறுவன அதிகாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்களின் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.