×

"வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்" - அரியலூர் ஆட்சியர்!

 

அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 14 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு பெண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ்  செயல்பட்டு வரும் 6 வட்டாரங்களில் உள்ள 14 வட்டார ஒருங்கிணைப்பாளர்  காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்திடும் பொருட்டு தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணிக்கு விண்ணப்பிக்க மற்ற விவரங்கள் : 1. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரியலூர் மாவட்டத்திற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். 2. 01.09.2022 அன்றைய தேதியில் 28 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். 3. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (மற்றும்) MS OFFICE- இல் குறைந்தபட்சம் 6 மாத கணினி திறன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 4. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் செயல்படுத்தப்படும்  திட்டங்கள் போன்ற திட்டங்களில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

 5. இப்பணிக்கான மதிப்பூதியம் ரூ.12,000 மட்டுமே வழங்கப்படும். 6. இவ்விண்ணப்பங்கள் 30.09.2022 அன்று மாலை 5 மணி வரை நேரடியாகவோ (அல்லது) அஞ்சல் வழியாகவோ திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியரகம், அரியலூர் - 621704 என்ற முகவரியில் சமர்ப்பிக்குமாறு பெண் விண்ணப்பதாரர்களை, ஆட்சியர் ரமண சரஸ்வதி கேட்டுக்கொண்டுள்ளார்.