×

கும்பகோணம் அருகே சாலை பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலி!

 

கும்பகோணத்தில் சாலை விரிவாக்கப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலை மருதநல்லுர், ஆடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன. இந்த நிலையில், கடந்த மாதம் 5ஆம் தேதி ஆடுதுறை பகுதியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து, செல்வராஜ் என்ற 60 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

இந்த நிலையில், நேற்று மருதாநல்லுருக்கு திருவிழாவுக்குகாக வந்திருந்த கும்பகோணம் செட்டிமண்டபம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவர், இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக கால்வாய் பாலத்துக்காக தோண்டப்பட்ட 10 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்தார்.இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த நாச்சியார் கோவில் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனை அறிந்த மோகனின் உறவினர்கள் சாலையில் பாதுகாப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளாததை கண்டித்தும், அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.