×

ஈரோட்டில் பிரபல பைக் திருடன் கைது... போலீஸ் வாகன சோதனையில் சிக்கினார்!

 

ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூரை சேர்ந்தவர் பிரபுராஜா. இவர் ஈரோடு மீனாட்சி சுந்தரம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது புதிய இருசக்கர வாகனத்தை மருத்துவமனை வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பின் வந்து பார்த்தபோது வாகனம் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரபுராஜா இதுகுறித்து ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையனை தேடி வந்தனர்.

இந்த நிலையில், ஈரோடு டவுன் குற்றப்பிரிவு போலீசார், எல்லை மாரியம்மன் கோவில் பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை மறித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார், அந்த இளைஞரை காவல்  நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் உப்பாறு அணை பகுதியை சேர்ந்த ஆகாஷ்குமார்(23) என்பதும், அவர் பிரபு ராஜாவின் இருசக்கர வாகனத்தை திருடியதையும் ஒப்புக் கொண்டார்.

மேலும், அவர் மீது இருசக்கர வாகனங்களை திருடியதாக திருப்பூரில் 4 வழக்குகளும், திண்டுக்கல்லில் 3 வழக்குகளும் என மொத்தம் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து, ஈரோடு டவுன் போலீசார், ஆகாஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.