×

திருப்பூருக்கு ரயிலில் கஞ்சா கடத்திவந்த வடமாநில இளைஞர் கைது; 5 கிலோ கஞ்சா பறிமுதல்!

 

திருப்பூருக்கு ரயிலில் கஞ்சா கடத்திவந்த வடமாநில இளைஞரை கைது செய்த ரயில்வே போலீசார், அவரிடம் இருந்து  5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு சென்ற விரைவு ரயிலில் திருப்பூருக்கு கஞ்சா கடத்தப்படுவதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், கோவை ரயில்வே உட்கோட்ட சிறப்பு பிரிவு போலீசார் ராஜலிங்கம், சையது முகமது, கோபால், சுரேஷ், சுஜித் உள்ளிட்டோர் நேற்று அதிகாலை ஈரோட்டில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற ஆலப்புழா விரைவு ரயிலில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் சந்தேகத்திற்கு உரிய விதமாக இருந்த இளைஞரிடம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அந்த நபர் வைத்திருந்த பையை பிரித்து சோதனையிட்டனர். 

அப்போது, பையில் சுமார் 5 கிலோ அளவிலான கஞ்சாவை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த சிறப்பு பிரிவு போலீசார், பின்னர் அந்த நபரை பிடித்து திருப்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு ரயில்வே போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த இளைஞர் ஓடிசா மாநிலம் பர்கார்த் பகுதியை சேர்ந்த சதானந்தா படேய்(37) என்பதும், அவர் திருப்பூருக்கு கஞ்சாவை கடத்திவந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து, அந்த நபர் மீது வழக்குப்பதிந்து கைது செய்த ரயில்வே போலீசார், பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.