×

கோவையில் மின்சாரம் தாக்கி தாய், மகள் பலி... வாட்டர் ஹீட்டரை ஆன்செய்தபோது நிகழ்ந்த சோகம்!

 

கோவை துடியலூரில் வாட்டர் ஹீட்டரை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கியதில் தாய், மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை துடியலூர் ஜி.என்.மில்ஸ் அருகே உள்ள மீனாட்சி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவர் திருச்சி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கிருத்திகா(52). இவர்களது மகள் அர்ச்சனா(18). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பயோ டெக்னாலஜி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், இன்று காலை அர்ச்சனா கல்லூரிக்கு செல்வதற்காக குளிப்பதற்காக, குளியல் அறைக்கு சென்றுள்ளார். அங்கு தண்ணீரை சூடு செய்ய ஹீட்டரை ஆன் செய்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் அலறி துடிக்கவே, சத்தம் கேட்டு ஓடி வந்த கிருத்திகா, அர்ச்சனாவை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அர்ச்சனாவை ஏற்றிச்செல்ல வந்திருந்த கல்லூரி பேருந்தின் ஓட்டுநர், அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.

அப்போது, தாய், மகள் இருவரும் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.