×

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் முத்துச்சாமி!

 

ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 240  பயனாளிகளுக்கு ரூ.26.26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துச்சாமி வழங்கினார்.

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு 240 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.26.26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்படி மாற்றுத் திறனாளிகளுக்கு  தையல் இயந்திரம், இருசக்கர வாகனம், மூன்று சக்கர சைக்கிள், காதொலி கருவி, வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, 2021-22ஆம் ஆண்டில் 7 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.13.24 கோடியில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளதாகவும், மாதாந்திர பராமரிப்பு தொகையாக 5 ஆயிரத்து 829 பேருக்கு ரூ.11.20 கோடி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் பராமரிப்புத் தொகை ரூ.1500லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படுவதாக கூறிய அமைச்சர் முத்துசாமி, ஈரோடு மாவட்டத்தில் 29 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதில் 3 ஆயிரத்து110 மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை மற்றும் 2 ஆயிரத்து 912 பேருக்கு அட்டை புதுப்பித்தும் வழங்கப்பட்டு உள்ளது என கூறினார். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அங்கீகாரமும், வாழ்வில் நம்பிக்கை ஏற்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.