×

அரச்சலூர் அருகே ஆம்னிவேனில் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது - 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

 

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே ஆம்னி வேனில் ரேஷன் அரிசியை கடத்திய நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1200 கிலோ ரேஷன் பறிமுதல் செய்தனர்.

ஈரோட்டில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு எஸ்.பி. பாலாஜி அறிவுறுத்தலின்படி, காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்களை கைதுசெய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் அரச்சலூர் அருகே மாவட்ட குடிமைபொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆம்னி வேனை போலிசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, ஆம்னி வேனில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்திச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து, 1,200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.  இது தொடர்பாக ஆம்னி வேலை ஓட்டி வந்த பெருந்துறையைச் சேர்ந்த சதீஷை (35) பிடித்து விசாரித்தனர். அப்போது, அரச்சலூர் சுற்றுவட்டார பகுதியில் தங்கி இருக்கும் வடமாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு ரேஷன் அரிசியை விற்பதற்காக கடத்திச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.