×

உக்ரைனிலிருந்து திரும்பிய ஊஞ்சலூர் மாணவரிடம் நலம் விசாரித்த எம்எல்ஏ சரஸ்வதி!

 

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரை சேர்ந்த மாணவர் பொன்னர் பாலாஜியை, மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அடுத்த கொளத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்வர்கள் அண்ணாதுரை (52) -  மோகனா (50) தம்பதியினர். இவர்களது மகன் பொன்னர் பாலாஜி (21). இவர் உக்ரைன் நாட்டில் வெனிஸ்கா பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக் கழகத்தில் 4ஆம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து, அங்குள்ள நகரங்களை கைப்பற்றி வருகிறது. இதனால் அங்கு சிக்கித்தவிக்கும் இந்திய மாணவர்கள், விமானம் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஊஞ்சலூர் மாணவர் பொன்னர் பாலாஜி அங்கு சிக்கியிருப்பது குறித்து தகவல் அறிந்த, மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ சரஸ்வதி, கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவரின் வீட்டுக்கு நேரில் சென்று, அவரது பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், மத்திய வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரனை தொடர்பு கொண்டு,  மாணவர் பொன்னர் பாலாஜி  நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மூலம் செய்வதாகவும் உறுதி அளித்தார். இந்த நிலையில், மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக மாணவர் பொன்னர் பாலாஜி, ருமேனியாவில் இருந்து இந்திய ராணுவ விமானம் மூலம் கடந்த 5ஆம் தேதி டெல்லி அழைத்து வரப்பட்டார்.

தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் கோவைக்கு வந்த அவர், பின்னர் ஊஞ்சலூர் திரும்பினார். மாணவர் தாயகம் திரும்பிய செய்தி அறிந்த, எம்எல்ஏ சரஸ்வதி, நேற்று மாணவர் பொன்னர் பாலாஜி வீட்டுக்கு சென்று, அவருக்கு சால்வை அணிவித்து நலம் விசாரித்தார். அப்போது, தன்னை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட மத்திய, மாநில அரசுகளுக்கு மாணவர் பொன்னர் பாலாஜி மற்றும் அவரது பெற்றோர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.இந்த சந்திப்பின்போது பாஜக மாவட்டத் தலைவர் எஸ். ஏ. சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர் .