×

குப்பையில் தவறவிட்ட வைர கம்மலை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களுக்கு குவியும் பாராட்டு!

 

குடியாத்தத்தில் தவறுதலாக குப்பையில் போட்ட வைரக் கம்மலை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களை பாராட்டி நகராட்சி சார்பில் புத்தாடை வழங்கி கவுரவிக்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பலமநேர் சாலையில் வசிப்பவர் கல்பனா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் சாமி கும்பிட்ட போது நகைகளை வைத்து பூஜையில் வைத்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த குப்பைகளை பையில் அடைத்து குப்பைத்தொட்டியில் போட்டுள்ளார். இதனை அடுத்து, நகராட்சி தூய்மை பணியாளர்கள் அதனை சேகரித்து குப்பைக் கிடங்கிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். 

இதனிடையே, கல்பனா பூஜையில் வைத்திருந்த வைர கம்மல் ஜோடி மாயமாகி உள்ளது. அப்போது, அது தவறுதலாக குப்பை போட்டது தெரியவந்ததால் கல்பனா இதுகுறித்து குடியாத்தம் நகராட்சி தலைவர் சௌந்தரராஜனுக்கு தகவல் அளித்தார். இது குறித்து, சௌந்தரராஜன் அளித்த தகவலின் பேரில் தூய்மை பணியாளர்களை கோபால், விசய் ஆகியோர் குப்பைகளை சோதனையிட்டபோது, கல்பனா அளித்த பையினுள் வைர கம்மல்கள் இருப்பது தெரியவந்தது. அதனை மீட்ட தூய்மை பணியாளர்கள், நகராட்சி தலைவர் வாயிலாக கல்பனாவிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வைர கம்மல்களை பத்திரமாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள் கோபால், விஜய் ஆகியோருக்கு நேற்று குடியாத்தம் நகராட்சி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் சௌந்தரராஜன் இருவருக்கும் புத்தாடைகள், மின்விசிறி ஆகியவற்றை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துணை தலைவர் பூங்கொடி, நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.