×

கொல்லிமலை வல்வில் ஓரி விழா தொடக்கம்... மலர் கண்காட்சியை ஆர்வமுடன் கண்டுகளித்த பொதுமக்கள்!

 

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தமிழக அரசு சார்பில் வல்வில் ஓரி விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று துவங்கியது. 75 ஆயிரம் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டி, வண்ணத்துப்பூச்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.  

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா இன்று தொடங்கியது. இதனையொட்டி, கொல்லிமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏ  பொன்னுசாமி கலந்து கொண்டு சுற்றுலா விழா, மலர் கண்காட்சி மற்றும் அரசு துறைகளின் பணி விளக்க கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த மலர் கண்காட்சியில் 75 ஆயிரம் மலர்களை கொண்டு மாட்டு வண்டி,வணத்துப்பூச்சி, தேனீ, வில் அம்பு உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் படகு குழாமியில் 3 புதிய படகு போக்குவரத்தும் துவங்கிவைக்கப்பட்டது. 

விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பல்வேறு பணிகளின் காரணமாக பங்கேற்கவில்லை. 2 நாட்கள் நடைபெறும் வல்வில் ஓரி விழாவில் சுற்றுலாத்துறை, கலைப்பண்பாட்டுத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகளும், கொல்லிமலை பகுதி அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் நடத்தும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. வல்வில் ஓரி விழாவையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சார்பில் பல்வேறு ஊர்களில் இருந்து கொல்லிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டு மலர் கண்காட்சியை ஆர்வமுடன் கண்டு களித்தனர். வல்வில் ஓரி விழாவின் 2ஆம் நாளான நாளை அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள், விழாவில் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை சிறப்புடன் நடத்தியவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேலும், விழாவையொட்டி  நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.