×

கண்மாய் ஆக்கிரமிப்பு - புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம்!

 

திருமயம் அருகே கண்மாயில் தனி நபருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ளது கீரணிப்பட்டி கிராமம். இக்கிராமத்தில் உள்ள கீரணி கண்மாய் நீர் பிடிப்பு பகுதியில் சட்ட விரோதமாக தனி நபருக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அந்த கிராம மக்கள், நேற்று புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது, திடீரென அவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

அப்போது, கீரணி கண்மாயில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தியும், கண்மாயை பாதுகாக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பிய அவர்கள், தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சாலையில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கிராம பிரதிநிதிகள் ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். கிராம மக்கள் போராட்டம் காரணமாக புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.