×

காஞ்சிபுரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.11 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

 

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.11.43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 212 மனுக்கள் அளிக்கப்பட்டது. மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில்  முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கை, கால் இயக்க குறைபாடு உள்ள 7 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு  ரூ.11 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான நவீன செயற்கை கால்கள் வழங்கப்பட்டது. அதேபோல், கேட்புதிறன் குறைபாடுள்ள 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13,900 மதிப்புள்ள காதொலி கருவிகள் வழங்கப்பட்டன.மேலும், மக்கள் குறை தீர்க்கும் நாளில் மனு வழங்கிய காஞ்சிபுரம் மாவட்டம் நாயிம்புதுர் கிராமத்தை மீனா என்ற பழங்குடி இனத்தை சேர்ந்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான இலவச தையல் இயந்திரத்தை ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பிரகாஷ் வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.