×

குமரியில் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் நாளை வேலைவாய்ப்பு முகாம்... +2 முடித்த பெண்களுக்கு ஆட்சியர் அழைப்பு!

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளதாக ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஸ்ரீஐயப்பா மகளிர் கல்லூரி, சுங்கான்கடை இணைந்து டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை நாளை காலை 9 மணி முதல் சுங்கான்கடை ஸ்ரீஐயப்பா மகளிர் கல்லூரியில் வைத்து நடத்த உள்ளது. இந்த முகாமில் ஓசூரில் அமைந்துள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களை மட்டும் நேர்காணல் நடத்தி இளநிலை தொழில் நிபுணர்கள் பணிக்காலியிடத்திற்காக தேர்ந்தெடுக்க உள்ளனர்.

 பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை. மாத சம்பளம் ரூ.16,557 இந்நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 12 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படுகிறது. மேலும், பணியில் சேர்ந்து ஒரு வருட அனுபவத்திற்கு பின் இளநிலை (தயாரிப்பியல்) பட்டப்படிப்பில் சேர வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இந்த பணி வாய்ப்பினை பெற விரும்பும் பெண்கள் தங்களது 12ஆம் வகுப்பு மாற்றுச்சான்றிதழ் (TC), 10 மற்றும் 12ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் (MARK SHEET), ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன் முகாம் நடைபெறும் நாளில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், tnprivatejobs.tn.gov.in என்ற தமிழ்நாடு அரசு தனியார் வேலைவாய்ப்பு இணையத்தில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.