×

சிதம்பரத்தில் துணிகரம்... ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை... மர்மநபர்கள் கைவரிசை!

 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், 15 பவுன் நகை மற்றும் 1.5 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாரியப்பா நகரை சேர்ந்தவர் ஜெயபாலன்(73). ஓய்வுபெற்ற மின்வாரிய செயற்பொறியாளர். இவரது மகன் ரஞ்சித்குமார். இவர் குஜராத் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் ஜெயபாலன் தனது மகனை பார்ப்பதற்காக குஜராத்துக்கு சென்றுள்ளார். இதனை அறிந்த மர்மநபர்கள் அவரது வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து, அங்கு பீரோவில் வைத்திருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை ஜெயபாலன் வீட்டிற்கு திரும்பியபோது, பீரோ உடைக்கப்பட்டு நகை, பணம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயபாலன், அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சிதரம்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.