×

நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை... பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,791 கனஅடியாக அதிகரிப்பு!

 

நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,791 அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்கி வருகிறது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 2.40 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. தமிழகத்தில்  வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.65 அடியாக உள்ளது. 

கடந்த சனிக்கிழமை வினாடிக்கு 2,400 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று காலை 4 ஆயிரத்து 791 கனஅடியாக அதிகரித்து, வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்திற்காக மட்டும் வினாடிக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், பவானிசாகர் அணை நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியை நெருங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.