×

ஈரோட்டில் குரூப்  4 தேர்வுக்கு தாமதமாக வந்தவர்கள் தேர்வெழுத அனுமதி மறுப்பு... கண்ணீருடன் திரும்பி சென்ற  தேர்வர்கள்!

 

ஈரோடு மாவட்டத்தில் இன்று 201 மையங்களில் குரூப் - 4 தேர்வு நடைபெற்ற  நிலையில் தேர்வுக்கு தாமதமாக வந்தவர்களை தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் கண்கண்ணீருடன் திரும்பி சென்றனர்

தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு நடைபெற்றது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 201 மையங்களில், 63 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குரூப் -4 தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். தேர்வர்கள் காலை சரியாக 8.30 மணிக்குள் அந்தந்த தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் தேர்வர்கள் ஆர்வமுடன் தங்களது தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வினை எழுதினர். காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கி பகல் 12.30 மணிக்கு நிறைவடைந்தது.  தொடர்ந்து, 12.30 மணி முதல் 12.45 மணி வரை தேர்வர்கள் தங்களது ஓ.எம்.ஆர் சீட்டை சரியாக பூர்த்தி செய்து உள்ளார்களா? என்று பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.  பகல் 12.45 மணிக்கு பிறகு தேர்வர்கள் அறைய விட்டு வெளியே சென்றனர்.

தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு, கண்காணிப்பு அலுவலர்கள் 201 பேர் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களை கண்காணித்தனர். மேலும் 43 நடமாடும் குழுக்கள் மற்றும் 16 பறக்கும் படைகளும் குழுக்களாக வந்து சோதனை செய்தனர். மேலும், தேர்வு வீடியோ பதிவு செய்யப்பட்டது. 

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த குரூப்- 4 தேர்வை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இதனிடையே, ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற குரூப்- 4 தேர்வில் 100-க்கு மேற்பட்ட தேர்வர்கள் பங்கேற்று எழுதினர். இதில் 25-க்கும் மேற்பட்ட ஆண்கள் - பெண்கள் 9 மணிக்கு பிறகு தேர்வு மையத்திற்கு வந்தனர். இதனால் அவர்களை தேர்வெழுத, அறை கண்காணிப்பாளர் அனுமதி மறுத்து விட்டார்.

தேர்வர்கள் பல முறை வலியுறுத்தியும் அனுமதி வழங்கப்படாததால் அவர்கள் வேதனையுடன் திரும்பி சென்றனர். சில பெண்கள் வேதனையை அடக்க முடியாமல் கதறி அழுதனர். இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு  தேர்வு மையங்களில் காலை 9 மணிக்கு பின் வந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால் கண்ணீருடன் திருப்பிச் சென்றனர்.