×

கோவையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி... தாய் உயிரிழப்பு!

 

கோவையில் இந்து மக்கள் கட்சி பிரமுகர் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவரது தாய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையை சேர்ந்தவர் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கருப்பையா. இவர் செங்கல்பட்டில் உள்ள தனது நிலம் சம்பந்தமான பிரச்சினை தொடர்பாக கோவையை சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவு துணை தலைவர் பிரசன்ன சுவாமிகள் என்பவரை அணுகி உள்ளார்.  அப்போது, பிரசன்ன சுவாமிகள் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி கருப்பையாவிடம் கடந்த 2  ஆண்டுகளில் ரூ.25 லட்சம் வரை பணம் பெற்றதாக கூறப்படுகிறது. பிரச்சினைகள் தீர மாங்கல்ய பூஜை செய்வதாக கூறி அவரது மனைவியிடம் 15 சவரன் நகைகளை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரசன்ன சுவாமிகள் தன்னிடம் நகை, பணத்தை பெற்றுக்கொண்டு பிரச்சினையை தீர்த்து வைக்கவில்லை என கூறி கருப்பையா, கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பிரசன்ன சுவாமிகள், அவரது மனைவி அஸ்வினி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று பிரசன்ன சுவாமிகள் தன் மீது வேண்டுமென்றே போலீசில் பொய்யான புகார் அளித்திருப்பதாக கூறி மனைவி, மகள் மற்றும் தாயாருடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். 

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பிரசன்ன சுவாமிகளின் தாயார் கிருஷ்ணகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தற்கொலை முயற்சியில் ஈடுபடும் முன் பிரசன்ன சுவாமிகள் வெளியிட்ட வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.