×

கோவையில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய முயன்ற ஹாட் பாக்ஸ்கள் பறிமுதல்!

 

கோவையில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ஏராளமான ஹாட்பாக்ஸ்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட தெலுங்குபாளையம் 71-வது வார்டு பகுதியில் சிலர் வாகனங்களில் ஹாட்பாக்ஸ் வைத்துக் கொண்டு, அதனை வீடு வீடாக விநியோகம் செய்வதாக, அதிமுக வேட்பாளர் கருப்பசாமிக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், கருப்பசாமி, கட்சியினருடன் அங்கு சென்று, ஹாட்பாக்ஸ்களை விநியோகித்த நபரிடம் விசாரித்துள்ளார். அப்போது அந்த நபர் முறையாக பதில் அளிக்கவில்லை. இதனை அடுத்து, கருப்பசாமி, இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் அளித்தார். இதனால் அந்த நபர்கள் வாகனத்தை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தில் இருந்த ஹாட்பாக்ஸ்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இதனை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.