×

வெளி நாடுகளில் வேலைக்கு அழைத்துச்சென்று துன்புறுத்தல்... காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு!

 

மியான்மர், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் வேலைக்கு சென்று சிக்கித் தவிக்கும் தமிழக இளைஞர்கள் குறித்து விவரங்களை தெரிவிக்க, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.  

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டை சார்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களை தாய்லாந்து, மியான்மர் மற்றும் கம்போடியா நாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ்  (Digital Sales and Marketing Executive) வேலை, அதிக சம்பளம் என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்துச்சென்று கால் சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி (Online Scamming) போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும் அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தொடர்ந்து  தகவல் பெறப்படுகிறது. 

எனவே வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள், ஒன்றிய அரசில் பதிவு ஒப்பந்தம் என்ன பணி? என்ற விவரங்களை சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொண்டும், அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிடில், தமிழ்நாடு அரசை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு, பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மை தன்மையை உறுதி செய்து கொண்டும்,  ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை மற்றும் வேலைக்கு செல்லும் நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படியும், வெளிநாட்டு வேலைக்கு செல்லுமாறு இளைஞர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 

மேலும், வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்படின் அயலகத்தமிழர் நலத்துறையின் 9600023645, 8760248625, 044 28515288 என்ற எண்களை பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.