×

அரியலூர் அருகே சரக்குவேனில் கடத்திய ரூ.50 லட்சம் குட்கா பறிமுதல்... தப்பியோடிய ஓட்டுநருக்கு போலீஸ் வலை!

 

அரியலூர் அருகே பழைய துணி என கூறி சரக்கு வேனில் கடத்திச்சென்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அரியலூர் மாவட்டம் காப்பாலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிலகால் பகுதியில் காவல் ஆய்வாளர் ஜெகதீஸ்வரன் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற சரக்கு வேனை போலீசார் நிறுத்த முயன்றனர். அப்போது, ஒட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக எடுத்துச் சென்றுள்ளார்.

இதனை அடுத்து, போலீசார் அந்த வாகனத்தை துரத்திச்சென்று பிடித்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வாகனத்தில் பழைய துணிகளை எடுத்துச்செல்வதாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஆவணங்களை காண்பிக்குமாறு போலீசார் கேட்டபோது, ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனை அடுத்து, போலீசார் வேனில் ஏறி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, லாரியில் இருந்த மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து, வேனில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 5 டன் குட்கா பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து காப்பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.