கோவை உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் தீவிர சோதனை... கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல்!
கோவையில் உள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 57 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
கோவை வ.உ.சி பூங்கா பகுதியில் உள்ள உணவகங்களில் நேற்று மாலை உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, 2 அசைவ உணவகங்களில் கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், கெட்டுப்போன பிரியாணியில் இருந்து எடுக்கப்பட்ட கறித்துண்டுகள், காய்ந்துபோன இடியாப்பம் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
மேலும், கடைகளில் இருந்து இறைச்சி மாதிரிகளை சேகரித்து ஆய்விற்கு அனுப்பிய அதிகாரிகன், அந்த கடையின் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினர். இதன்படி, நேற்றைய ஆய்வில் 57 கிலோ அளவிலான கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், 35 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள், 3 உணவு மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த ஆய்வுகுறித்து பேசிய உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன், கோவையில் சிக்கன் ஷவர்மா மட்டுமின்றி சைவம், அசைவம் என பல்வேறு வகை உணவுகளை, உணவகங்களில் பதப்படுத்தி வைத்துள்ளனர். குறிப்பாக பாதி வெந்த நிலையில் சிக்கனை சமைப்பதற்காக பதப்படுத்தி வைத்திருப்பது தெரியவந்தது. மேலும், பழைய பிரியாணி, பீட்சா உள்ளிட்டவற்றை குளிர்பதன பெட்டியில் வைத்திருப்பது தெரியவந்தது. இது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது.
அதேபோல், இஞ்சி பூண்டு பேஸ்ட்டை 5 நாட்கள் வரை பதப்படுத்தி உபயோகிப்பது தெரியவந்தது. அசைவம் மட்டுமின்றி சைவ, துரித உணவுகளையும் பதப்படுத்தி விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். முதற்கட்டமாக சம்பந்தபட்ட கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.