×

உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்த வெள்ளநீர்!

 

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலைப் பகுதியில் நேற்று மாலை பெய்த கனமழையின் காரணமாக அமணலிங்கேஸ்வரர் கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து கொண்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலையில் பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலின் அருகே பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது.  இதனால் சுவாமியை தரிசனம் செய்யவும்,  பஞ்சலிங்க அருவியில் மூலிகைகள் கலந்து தண்ணீரில் குளிப்பதற்காகவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருவது வழக்கம்.

இதனிடையே, உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வந்ததது. இந்த நிலையில், நேற்று மலை 4 மணி அளவில் கோவில் அமைந்துள்ள திருமூர்த்தி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. பல மணிநேரம் நீடித்த மழையினால் வனப்பகுதியில் உள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, பஞ்சலிங்க அருவியில் வெள்ளநீர் அர்ப்பரித்து கொட்டியது. மேலும், மலையின் அடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலையும் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து கொண்டது. 

இதனால் கோவிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மேலும், வெள்ளம் சூழ்வதற்கு முன்பாகவே கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்டதால் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் தொடர்ந்து கரைபுரண்டு ஓடும் நிலையில், நீர்வரத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வெள்ளம் குறைந்ததும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.