×

சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் தீ விபத்து!

 

சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் நேற்றிரவு பட்டாசு தீப்பொறி பட்டு தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையொட்டி, கோவில் ராஜகோபுரத்தில் உள்ள சிற்பங்கள், சுதைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கோபுரம் முழுமையாக சாரம் அமைக்கப்பட்டு, பிளாஸ்டிக் தார் பாயினால் மூடப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், நேற்று இரவு கோவில் வழியாக திருமண நிகழ்ச்சிக்கு சீர்வரிசை கொண்டு சென்ற சிலர், வானவெடிகளை கொளுத்தி உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கோபுரத்தில் கட்டப்பட்டிருந்த தார் பாயில் தீப்பொறி விழுந்து, தீ பற்றியது. சிறிது நேரத்திற்குள் தீ மற்ற பகுதிகளுக்கும் பரவியதால், கோபுரத்தின் உச்சி பகுதி முழுவதும் பற்றி எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி பொதுமக்கள், சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கோபுரத்தின் மீது பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி அவர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கோவிலின் கோபுரம் மற்றும் சிலைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.