×

பட்டாசு தயாரிக்க வைத்திருந்த வெடி மருந்து, வெடித்து சிதறியதில் மாணவி பலி... குமரி அருகே  சோகம்!

 

கன்னியகுமரி அருகே பட்டாசு தயாரிக்க வீட்டில் வைத்திருந்த வெடி மருந்து வெடித்து சிதறியதில் பள்ளி மாணவி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அடுத்த ஆறுதெங்கன் விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன். கூலி தொழிலாளி. இவருக்கு பார்வதி என்ற மனைவியும், தேன்மொழி(13), வர்ஷா என 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் ஆலங்கோட்டை அரசுப்பள்ளியில் முறையே 8 மற்றும் 5ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில், ராஜன் திருவிழாக்களுக்கு பட்டாசு தயாரித்து கொடுத்து வருகிறார். இதற்காக தனது வீட்டின் முன் அறையில் வெடி மருந்துகளை இருப்பு வைத்துள்ளார். 

நேற்றிரவு 8 மணி அளவில் வீட்டில் வளர்த்து வரும் முயல்களுக்கு, உணவு கொடுப்பதற்காக சிறுமி வர்ஷா, வெடி மருந்து வைத்துள்ள அறைக்கு சென்றுள்ளார். அப்போது, திடீரென அந்த அறை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த அறை இடிந்து தரைமட்டமானது. இந்த சம்பவத்தில் சிறுமி வர்ஷா உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ராஜனின் மனைவி பார்வதியும் காயமடைந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

தகவல் அறிந்த ராஜாக்கமங்கலம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமி வர்ஷாவின் உடலை மீட்டு பிரேத பிரிசோதனைக்காக குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனுமதியின்றி வீட்டில் வெடி மருந்து பதுக்கி வைத்தது தொடர்பாக ராஜனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.