×

2 ஆண்டுகளுக்கு பின் ஈரோடு - கோவை பயணிகள் ரயில் சேவை துவக்கம்; இனிப்பு வழங்கி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்!

 

ஈரோட்டில் இருந்து கோவைக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் பயணிகள் ரயில் சேவை துவங்கியுள்ளது. இதனையொட்டி, காங்கிரஸ் கட்சியினர் ரயில் என்ஜினுக்கு மாலை அணிவித்தும், பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கியும் வழியனுப்பி வைத்தனர்.

ஈரோட்டில் இருந்து கோவை வரையிலும், அதேபோல் ஈரோட்டில் இருந்து பாலக்காடு வரையிலும் நாள்தோறும் மெமு எனப்படும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில்கள் ஈரோட்டில் இருந்து திருப்பூர், கோவை நகரங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ - மாணவிகள் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஈரோடு - கோவை மற்றும் ஈரோடு - பாலக்காடு பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தொற்று குறைந்ததால், பல்வேறு ரயில்களும் இயங்க தொடங்கினாலும், இந்த ரயில்கள் இயக்கப்படவில்லை. 

இதனால், ஈரோட்டில் இருந்து திருப்பூர், கோவைக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ரயில்களை இயக்க வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவரும், முன்னாள் தென்னக ரயில்வே குழு உறுப்பினருமான கே.என்.பாஷா மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்திருந்தார். பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 1 முதல் ஈரோடு - கோவை, ஈரோடு - பாலக்காடு மற்றும் சேலம் - கோவை பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்து இருந்தது.  

அதன்படி, இன்று காலை 7 மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து ஈரோடு - கோவை பயணிகள் ரயில் புறப்பட்டு சென்றது. இதனை தொடர்ந்து, காலை 7.45 மணிக்கு ஈரோடு - பாலக்காடு பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. ஈரோட்டில் இருந்து காலை 7.15-க்கு புறப்படும் ஈரோடு - கோவை பயணிகள் ரயில் காலை 8.15-க்கு திருப்பூரையும், காலை 9.15 மணிக்கு கோவையையும் சென்றடையும். மறு மார்க்கத்தில் கோவையில் மாலை 6.40 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 9.15 மணிக்கு ஈரோட்டை வந்தடையும். 2 வருடங்களுக்கு பிறகு ஈரோடு - கோவை பயணிகள் ரயில் இயக்கப்பட்டதால், ஈரோட்டில் இருந்து திருப்பூர், கோவை நகரங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி - கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே, இன்று காலை ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு புறப்பட்ட பயணிகள் ரயில் என்ஜினுக்கு, மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத்துறை தலைவர் சுரேஷ், துணை தலைவர் கே.என்.பாஷா, நெசவாளர் அணி தலைவர் மாரிமுத்து உள்ளிட்டோர் மாலை அணிவித்து பூஜைகள் செய்தனர். தொடர்ந்து, ரயில் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி, வழியனுப்பி வைத்தனர். இதில், காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ம.முகமது அர்சத், மண்டலத் தலைவர்கள், மாவட்ட பொதுச் செயலாளர்கள், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சி எம் ராஜேந்திரன், காங்கிரஸ் தொழிலாளர் கமிட்டியின் தலைவி கிருஷ்ணவேணி,  ஈ.எம்.சிராஜ்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.