எழுமாத்தூர் கனககிரி மலைக்கோவில் பூட்டை உடைத்து கொள்ளை; சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை!
ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் கனககிரி மலைக்கோவில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் பூஜை பொருட்கள் மற்றும் கோவில் மணிகளை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூரில் கனககிரி மலை அமைள்ளது. இந்த மலையின் உச்சியில், கனகாசல குமரன் கோயிலும், மலையின் நடுவில் பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன. கடந்த செவ்வாய்க் கிழமை மாலை கோயில் குருக்கள் பூஜைகள் முடிந்து, மலையில் இருந்து கீழே இறங்கி சென்றுள்ளார். பின்னர், நேற்று காலை பூஜை செய்வதற்காக மீண்டும் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான குருக்கள் உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது, மர்மநபர்கள் கோயிலில் இருந்த 6 மணிகள் மற்றும் சிசிடிவி கேமரா உபகரணங்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. அத்துடன், பெருமாள் கோயில் பூட்டை உடைத்து, அங்குள்ள பொருட்களையும் திருடியது தெரியவந்தது. இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் அரச்சலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில், ஏஎஸ்பி கௌதம் கோயல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டார். மேலும், சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளையும் சேகரித்தனர்.
தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து, அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இதனிடையே, மர்ம நபர்கள் கோயிலின் பூட்டை உடைத்து பூஜை பொருட்கள், மணிகள் உள்ளிட்டவற்றை திருடிச்செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.