×

பெருந்துறையில் கோழிப்பண்ணையாளர்கள் நலச் சங்கம் சார்பில் முட்டை திருவிழா!

 

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கோழிப்பண்ணையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நடந்த முட்டை திருவிழாவில், பொதுமக்களுக்கு முட்டையால் ஆன பல்வேறு உணவு வகைகள் இலவசமாக வழங்கப்பட்டது. 

ஈரோடு மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு மற்றும் மாவட்ட கோழிப்பண்ணையாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேருந்து நிலையத்தில் நேற்று முட்டை திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, கோழிப்பண்ணையாளர்கள் சங்க மாநில தலைவர் சிங்கராஜ் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு ஆம்லேட், ஆஃப்பாயில், மசாலா முட்டை உள்ளிட்ட முட்டையினால் ஆன பல்வேறு உணவுகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், நாள்தோறும் 2 முட்டைகள் சாப்பிடுவதன் அவசியம் குறித்தும், முட்டையில் உள்ள சத்துக்கள் குறித்தும் பொதுமக்களிம் எடுத்துரைத்தனர்.

அப்போது, தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில், தினமும் ஒரு முட்டை வழங்கி வருவதை உயர்த்தி, அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் 2 முட்டை வழங்கினால், அவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு திறன் மேம்படும் என தெரிவித்த விழாக்குழுவினர், தமிழக அரசு இதுகுறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.