×

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெருந்துறை வருகை... அதிமுகவினர் உற்சாக வரவேற்பு!

 

ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயரலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வருகை தந்தார். பெருந்துறை பேருந்து நிலையம் பகுதியில் அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பணன், கே.வி.ராமலிங்கம், பெருந்துறை எம்எல்ஏ எஸ். ஜெயக்குமார், பவானிசாகர் எம்எல்ஏ பன்னாரி  ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் தொண்டர்களிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி,  திமுக அரசு மக்களைப் பற்றி சிந்திக்காமல் தனது குடும்பத்தை பற்றி மட்டும் சிந்திக்கும் ஆட்சியை தான் நடத்துவதாகவும், தேர்தல் வாக்குறுதிகள் 14 மாதமாகியும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் 50 ஆண்டு கோரிக்கையான அத்திக்கடவு- அவினாசி திட்டம் ரூ. 1,652 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டதாகவும், 6 மாதங்களுக்கு முன்பே முடித்திருக்க வேண்டிய இத்திட்டத்தை திமுக அரசு ஆமை வேகத்தில் நிறைவேற்றுவதாகவும் குற்றம்சாட்டினார். இத்திட்டத்தின் மூலம் 3 மாவட்டங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் பவானிசாகர் உபரி நீரால் நிரப்பப்பட்டிருக்கும், விவசாயிகள் பயன் அடைந்திருப்பார் என கூறிய அவர்,  திட்டம் நிறைவேறாததால் பவானிசாகர் அணையின் உபரிநீர் கடலில் கலப்பதாக தெரிவித்தார்.

மேலும், கஞ்சா போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து விட்டது என்று சட்டமன்றத்திலும், ஊடகம் மூலமாகவும் தான் தெரிவித்தேன் என கூறிய எடப்பாடி பழனிசாமி, அரசு அதனை காதில் போட்டுக் கொள்ளவில்லை என்றும், இதனால் இன்று பள்ளி மாணவர்கள் கூட போதை பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார் . மேலும், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தாங்கள் சட்டம் இயற்றியதாகவும், ஆனால் அது எதிர்த்த நிறுவனங்களின் வழக்கை சரிவர கையாளாததால் நீதிமன்றம் புதிய சட்டம் இயற்ற அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார். இதனால் பலர் தற்கொலை செய்து கொண்டதாகவும், சொத்துக்களை இழந்துள்ளதாகவும், ஆனால் இதுவரை ஆன்லைன் ரம்மி தடை செய்து சட்டம் இயற்ற வில்லை என்றும் அவர் தெரிவித்தார்.ஏனென்றால் ரூ. 20 ஆயிரம் கோடி அந்த நிறுவனங்களிடமிருந்து கைமாறி உள்ளதாக குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, சூதாட்டத்தை ஒழிக்க மக்களிடமே கருத்து கேட்கும் ஒரே அரசு திமுக அரசு என தெரிவித்தார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் கைவிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து என்றார்கள், ஆனால் இன்று வரை ரத்து செய்யப்படவில்லை என தெரிவித்தார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டின் மூலம் 550 பேர்மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாகவும், அனைவரின் மருத்துவக் கல்விக்கட்டணத்தை அரசு ஏற்கும் என அறிவித்ததாகவும் கூறினார்.  தொடர்ந்து பேசிய அவர் ஆட்சி மாற்றதால் ஆதிதிராவிடர்களுக்கு வீடுகட்டும் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்றும், அடுத்து அதிமுக ஆட்சி மலரும், அப்போது அவர்கள் மீது தனி கவனம் செலுத்தப்படும், மேலும் திமுக அரசினால் முடக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் புத்துயிர் பெறும் என அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி-க்கள் செல்லகுமார சின்னையா, காளியப்பன், சத்தியபாமா,  முன்னாள் எம்எல்ஏ-க்கள் கே.எஸ். பழனிசாமி, டாக்டர்.பொன்னுசாமி, கே.சி.பொன்னுத்துறை, பூந்துறை பாலு, கே.எஸ்.தென்னரசு முன்னாள் மேயர் மல்லிகா ஆகியோர் வகித்தனர்.