×

"குழந்தைகளை நீர் நிலைகளில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ அனுப்ப வேண்டாம்" - விருதுநகர் ஆட்சியர் வேண்டுகோள்!

 

வடகிழக்கு பருவமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி உள்ளதால், குழந்தைகளை குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ அனுப்ப வேண்டாம் என ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 01.10.2022 முதல் தொடங்கியுள்ளது. தற்போழுது வடகிழக்கு பருவமழை காலமாக உள்ளதால் கடந்த 1 மாதமாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையினால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களில் உள்ள கண்மாய், குளம்,  குட்டைகள் முழுவதுமாக நீர் நிரம்பி உள்ளது. இந்த நேரத்தில் வடகிழக்கு பருவ மழையினால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழும் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதற்கு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் பாதுகாப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வடகிழக்கு பருவமழையினால் தங்கள் பகுதிகளில் ஏற்படும் சேதங்கள் குறித்து விருதுநகர் மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை அவசர கட்டுப்பாட்டு அறை 1077 என்ற தொலைபேசி எண்ணிற்கு 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம். நேற்று 07.11.2022ம் தேதி அருப்புக்கோட்டை பாளையம்பட்டியை சேர்ந்த சரத்குமார் என்பவரது குழந்தைகள் சந்திரமணி (10), சித்தார்த்(8) ஆகியோர் ஊரிலுள்ள ஊரணியில் குளிக்க சென்றபோது தவறி விழுந்ததில் இறந்து விட்டனர். 

இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கண்மாய், குளம் மற்றும் குட்டைகள் முழுவதுமாக நீர் நிரம்பியுள்ளதால் குளிப்பதற்கு செல்ல வேண்டாம் எனவும், தங்கள் குழந்தைகளை கண்மாய்கள், குளங்கள், ஓடைகள், ஊரணிகள் மற்றும் குட்டைகள் இருக்கும் இடங்களுக்கு குளிப்பதற்கோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்கோ அனுப்ப வேண்டாம் என ஆட்சியர் மேகநாத ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.