×

"தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை வளர்க்க வேண்டாம்".- தருமபுரி மாவட்ட மீன்வளத்துறை அறிவுறுத்தல்!

 

தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை வளர்க்க வேண்டாம் என மீன் விவசாயிகளை, மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது , தருமபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேசிய பசுமை ஆணைய உத்தரவின்படி, வெளிநாட்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை வளர்க்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளது. இம்மீன்கள் நமது நாட்டின் பாரம்பரிய நன்னீர் மீன் இனங்களையும் அதன் முட்டைகளையும் உணவாக்கி கொள்வதால் நமது பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் அபாய நிலை உருவாகும். இந்த மீன்களை பண்ணைக் குட்டைகளிலோ, அல்லது மீன் வளர்ப்பு குளங்களிலோ இருப்பு செய்து வளர்த்தால், இவை மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காலங்களில் குளங்களிலிருந்து தப்பித்துவிட வாய்ப்பு உள்ளது. அங்ஙனம் தப்பிச்செல்லும் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் ஏரி மற்றும் ஆறுகளில் சென்று பிற மீன் இனங்களை அழிப்பதால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை தவிர வேறு எந்த மீன்களும் பிழைக்க வாய்ப்பில்லாத நிலை ஏற்படும். இதனால் குறிப்பிட்ட காலத்திற்கு பின் உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதற்கும் அவர்களது வாழ்வாதாரத்திற்கும் வழி இல்லாமல் போய்விடும்.

எனவே தருமபுரி மாவட்டத்தில் மீன் விவசாயிகள் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை இருப்பு செய்து வளர்க்க வேண்டாம் எனவும், ஏற்கனவே மீன்பண்ணைகளில் இவ்வின மீன்களை வளர்த்து வரும் மீன்வளர்ப்போர்கள் மீன் பண்ணைகளில் இவ்வின மீன்களை வளர்த்து வரும் மீன் வளர்ப்போர்கள் மீன் பண்ணைகளில் இவ்வின மீன்களை அழிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட ஆட்சியரின் ஆணையை மீறி ஆப்பிரிக்க கெளுத்தி மீன் வளர்ப்பு செய்தால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், இதன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள மீன் பண்ணையாளர்கள் அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்களை மீன்வளத்துறையின் ஆலோசனை பெற்று வளர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.