×

ஈரோட்டில் மாவட்ட அளவிலான கபடி போட்டி; வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் முத்துசாமி!

 

ஈரோட்டில் நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி பரிசுக் கோப்பைகளை வழங்கினார்.

ஈரோட்டில் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள், வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 175 ஆண்கள் அணிகளும், 10 பெண்கள் அணிகளும் பங்கேற்று விளையாடின. போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

அதன்படி, பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த கொடிவேரி டிரீம் ஸ்டார் அணிக்கு ரூ.5,555 ரொக்கப்பரிசும், பரிசுக்கோப்பையும், 2-வது இடம் பிடித்த கோபி சாரதா கல்லூரி அணிக்கு ரூ.3,333 ரொக்கப்பரிசும், பரிசுக்கோப்பையும், 3-வது மற்றும் 4-வது இடம் பிடித்த பிரம்மதேசம் சக்தி பிரதர்ஸ் அணி மற்றும் கருங்கல்பாளையம் சுரேந்தர் மெமோரியல் அணிக்கு தலா ரூ.1,111 ரொக்கம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. இதேபோல் ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.11,111, 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.7,777-ம், 3-வது, 4-ம் இடம் பெற்ற அணிகளுக்கு தலா ரூ.4,444 ரொக்கம் மற்றும் பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டன. 

பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஈரோடு மாவட்ட கால்பந்து கழக தலைவர் பாலசுப்பிரமணி, தேசிய கபடி வீரரும், ஓய்வுபெற்ற வருமானவரித்துறை அதிகாரியுமான சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.