×

அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் தரமற்ற உணவு விநியோகம்; பள்ளி காப்பாளரை சஸ்பெண்ட் செய்த ஆட்சியர்!

 

ஜவ்வாது மலையில் உள்ள புதூர்நாடு அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் தரமற்ற உணவு விநியோகம் செய்த விவகாரம் தொடர்பாக பள்ளி காப்பாளரை பணியிடை நீக்கம் செய்து, திருப்பத்தூர் ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் புதூர்நாடு ஊராட்சியில் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் மலைவாழ் மக்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தற்காலிகமாக வனத்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியில் மாணவ - மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமுடன் இல்லை என்றும், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என கூறி, கடந்த திங்கட்கிழமை 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், புகாருக்கு உள்ளான புதூர்நாடு உண்டு உறைவிடப் பள்ளியில், நேற்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, உணவின் தரம் குறித்தும், சமையல் பொருட்கள் இருப்பு குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின்போது, பள்ளியில் வழங்கப்படும் உணவு பொருட்களில் சில தரமற்றதாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து உணவு பொருட்களை விநியோகம் செய்யும், ஒப்பந்ததாரர் வினோத் குமாருக்கு நோட்டீஸ் வழங்கு ஆட்சியர் உத்தரவிட்டார். அத்துடன், பள்ளி காப்பாளர் ராமச்சந்திரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்த ஆட்சியர் அமர்குஷ்வாஹா, புகார்கள் குறித்து பழங்குடியினர் நல திட்ட அலுவலரிடம் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தினார். இந்த ஆயவின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, பழங்குடியினர் திட்ட அலுவலர் ராஜஸ்ரீ ஆகியோர் உடன் இருந்தனர்.