×

திருவாரூரில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் தைக்கப்பட்ட தேசிய கொடிகள் நகராட்சிகளுக்கு வழங்கல்!

 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக தைக்கப்பட்ட தேசிய கொடியினை நகராட்சிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார். 

திருவாரூர் மாவட்டத்தில் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சுதந்திர திருநாள் ஆண்டை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லுர், திருத்துறைப்பூண்டி ஆகிய நகராட்சிகளுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் 50, 633 மூவர்ண தேசிய கொடிகள் தைத்து தரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் 6 அலகுகளில் 35 மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மகளிர் சுய உதவிக்குழுக்களால் தைக்கப்பட்ட தேசிய கொடியை நகராட்சிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதன்படி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் நகராட்சி ஆணையரிடம் கொடியை வழங்கினார். இந்த தேசிய கொடிகள் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.