×

மின்கட்டண உயர்வை கண்டித்து ஈரோட்டில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்!

 

உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து ஈரோட்டில் தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தியது மற்றும் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து தேமுதிக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைமை அறிவித்து இருந்தது. அதன்படி, ஈரோட்டில் இன்று காலை சூரம்பட்டி 2ஆம் நம்பர் பேருந்து நிறுத்தம் பகுதியில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார்.

அக்கட்சியின் தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் பாலாஜி, கேப்டன் மன்ற துணை செயலாளர் மாரிமுத்து, பட்டத்தாரி ஆசிரியர் துணை செயலாளர் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதனை தொடர்ந்து, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு உயர்த்தி உள்ள ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்தும், மாநில அரசு உயர்த்தி உள்ள மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தெற்கு மாவட்ட செயலாளர் முருகன், வடக்கு மாவட்ட செயலாளர் சுப்ரமணி, மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் ரங்கராஜ், தாமரைசெல்வி, செயற்குழு உறுப்பினர்கள் குமார், சஞ்சய்குமார், கேப்டன் மன்ற செயலாளர் கிருஷ்ணராஜ், துணை செயலாளர் ஆனந்தன், இளைஞரணி பிரகாஷ், தொண்டரணி சாதிக் பாட்ஷா, ஆட்டோ தொழிற்சங்கம் கந்தசாமி, பகுதி செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.