×

கோவையில் 2-வது நாளாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்; சாலை மறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது!

 

கோவையில் பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர் இன்று 2-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கோவை மாவட்டத்தில் பணி நிரந்தரம், மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்த  தினக்கூலியை வழங்குதல் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கோவை மாவட்டத்தில் உள்ள கோவை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் 10 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்று உள்ளனர். இதனால் கோவை மாநகர பகுதிகள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

போராட்டத்தின் 2-வது நாளாக இன்று கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 500-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவும், தினக்கூலியை உயர்த்தி வழங்கவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, தூய்மை பணியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக ஒப்பந்த தூய்மை பணியாளர் சங்க நிர்வாகிகளுடன், மாவட்ட ஆட்சியர் சமீரன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.