×

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை... முழு கொள்ளளவை எட்டியது வரதமாநதி அணை!

 

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பழனி அருகே உள்ள வரதமாநதி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வரதமாநதி அணை அமைந்துள்ளது. மொத்தம் 66 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியான கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மலை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று அணை தனது முமு கொள்ளளவை எட்டியது. தற்போது அணைக்கு வினாடிக்கு 50 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், நீர்மட்டம் 66.47 அடியாக உள்ளது. வரதமாநதி அணை நிரம்பியதை அடுத்து, அணைக்கு வரும் நீர் முழுமையாக ஆயக்குடி, பழனி வையாபுரி குளங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் வழிந்தோடும் காட்சியை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.  இதேபோல், தொடர் மழையின் காரணமாக பழனி அருகே அமைந்துள்ள பாலாறு பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் 42.68 அடியாகவும், குதிரையாறு அணையின் நீர்மட்டம் 60.82 அடியாகவும் உயர்ந்துள்ளது.