×

கோவை தனியார் மருத்துவமனை தாக்குதல் வழக்கு : தலைமறைவாக இருந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் கைது!

 

கோவையில் தனியார் மருத்துவமனையில் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தலைமறைவாக இருந்த கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை தலைவர் ராஜேந்திரனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்..

கோவை காந்திபுரத்தில் உள்ள எல்லன் மருத்துவமனையை, அதன் நிர்வாக இயக்குநரான மருத்துவர் ராமச்சந்திரன் (75), சென்னையை சேர்ந்த மருத்துவர் உமா சங்கர் என்பவருக்கு லீசுக்கு கொடுத்திருந்தார். இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு மருத்துவமனைக்குள் மர்மநபர்கள் புகுந்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை தாக்கிவிட்டு, பொருட்களையும் சூரையாடினர். இது தொடர்பாக மருத்துவர் ராமச்சந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர். 

மேலும், அவர் ரூ.4.95 கோடி வாடகை தராமல் மோசடி செய்ததாகவும், ரூ.100 கோடி மதிப்பிலான மருத்துவமனையை மருத்துவர் உமா சங்கர், அவரது மேலாளர் மருதவாணன் விற்பனை செய்ய முயற்சிப்பதாகவும் கூறி, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவர் உமா சங்கர், அவரது மேலாளர் மருதவாணன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்த மருத்துவர் உமா சங்கர் சாலை விபத்தில் உயிரிழந்தார். 

இந்த சூழலில், தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கு கோவை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில், எல்லன் மருத்துவமனை தாக்குதல் சம்பவத்திற்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர் தான் காரணம் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார், மருத்துவர்கள் ராமச்சந்திரன், காமராஜ்(49), ராமச்சந்திரனின் உதவியாளர் முருகேஷ்(47), மூர்த்தி(45) மற்றும் கார் ஓட்டுநர் பழனிசாமி ஆகியோர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். 

கைதானவர்களிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், மருத்துவர் ராமச்சந்திரனுக்கு உதவியாக அடியாட்களை ஏற்பாடு செய்தது கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை தலைவரும், வழக்கறிஞருமான ராஜேந்திரன் என்பது தெரியவந்து. இதனை தொடர்ந்து, ராஜேந்திரனை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு அழைத்தபோது, அவர் தலைமறைவாகினார். சிபிசிஐடி போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து ராஜேந்திரனை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் வழக்கறிஞர் ராஜேந்திரன் சரணடைந்தார். இதனை அடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.