×

சென்னிமலை அருகே பைக்கில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு; வேன் ஓட்டுநர் கைது!

 

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்க செயினை பறித்த வேன் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே தோப்புப்பாளையம் எம்.பி.என். காலனியை சேர்ந்தவர் சாந்தி. இவர் கடந்த 21ஆம் தேதி தனது மகன் கவின்குமார் (23) உடன் சென்னிமலைக்கு சென்றிருந்தார். பின்னர் இருவரும் இருசக்கர வாகனத்தில் ஊத்துக்குளி ரோடு வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், வாகனத்தில் அமர்ந்திருந்த சாந்தியின் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டார்.

இது குறித்து சாந்தி அளித்த புகாரின் அடிப்படையில் சென்னிமலை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.   இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னிமலை - ஈங்கூர் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தை சேர்ந்த மகாராஜன் என்பவரது மகன் கருப்புசாமி (31) என்பதும், இவர் வேன் ஓட்டுநராக பணிபுரிவதும் தெரிய வந்தது. மேலும், அவர் சாந்தியின் தங்க சங்கிலியை பறித்துச்சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து கருப்புசாமியை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார்  பெருந்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கருப்புசாமியை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.