×

சென்னிமலை அருகே தூரி விளையாடியபோது கயிறு இறுக்கி சிறுவன் பலி!

 

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே மரத்தில் தூரி கட்டி விளையாடியபோது கயிறு இறுக்கியதில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள்  ஜனதா குமார் - நிக்கி தேவி தம்பதியினர். இவர்களுக்கு பியூஸ்குமார்(12), ராஜா குமார் (10) என 2 மகன்கள் உள்ளனர். தம்பதியினர் இருவரும் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் சிப்காட் பகுதியில் தங்கியிருந்து, அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர். மகன்கள் இவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.  

இந்த நிலையில், நேற்று பியூஸ்குமார், ராஜா  குமார் ஆகியோர் பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, வீட்டின் அருகில் உள்ள வேப்ப மரத்தில் கயிற்றில் தூரி கட்டி விளையாடி உள்ளனர். அப்போது, ராஜா குமார், தனது கழுத்தில் கயிற்றை கட்டிக்கொண்டு குதித்துள்ளார். இதில் அவரது கழுத்தை கயிறு இறுக்கியதால் மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு சிறுவன் ராஜா குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் சென்னிமலை போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். தூரி விளையாடிய போது கயிறு இறுக்கி சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.