×

திருமணமான 3 நாட்களில் எல்லை பாதுகாப்பு படை வீரர் தூக்கிட்டு தற்கொலை... குமரி அருகே சோகம்!

 

குமரி அருகே திருமணமான 3 நாட்களில் எல்லை பாதுகாப்பு படை வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பூட்டேற்றி அருகே உள்ள வடக்கு காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் டேவி. இவரது மகன் சுபின் (32). இவர் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்த வந்தார். இந்த நிலையில், பெற்றோர் சுபினுக்கு விழுந்தயம்பலம் பகுதியை சேர்ந்த உறவினர் தனிஷா என்பவருடன் திருமணம் நிச்சயம் செய்து, கடந்த 14ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்காக விடுமுறையில் வடக்கு காட்டுவிளைக்கு வந்திருந்த சுபினுக்கு, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

பின்னர் திட்டமிட்டபடி கடந்த 14ஆம் தேதி சுபின், தனிஷா திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று இரவு புதுமண தம்பதியினர் இருவரும் தங்களது அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். இன்று அதிகாலை திடீரென சுபின் வீட்டின் பகுதியில் உள்ள தாழ்வாரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், சுபினை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சுபின் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை கேட்டு உறவினர்கள் கதறி அழுதனர். தகவலின் பேரில் வந்த கருங்கல் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சிபின் தந்தை டேவி புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.