×

சீர்காழி அருகே தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து - இருவர் பலி, மூவர் படுகாயம்!

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறியதில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், மூவர் படுகாயம் அடைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தொடுவாய் கிராமத்தில் அலி உசேன் என்பவருக்கு சொந்தமான இறாலுக்கு தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக ஆலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வழக்கம்போல் ஆலையில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், பகல் 12.10 மணியளவில் தொழிற்சாலையில் உள்ள பாய்லர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பாய்லரின் அருகே வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜார்கண்டை சேர்ந்த தொழிலாளர்கள் அருண் ஓரான் (25), பல்ஜித் ஓரான்(20) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பாய்லர் ஆபரேட்டர் ரகுபதி(53), மாரிதாஸ்(45), மற்றும் ஜாவித்(29) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை சக பணியாளர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனை மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தகவலின் பேரில் விபத்து பகுதிக்கு விரைந்து சென்ற சீர்காழி போலீசார், உயிரிழந்த இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.