×

குமரி அருகே மாயமான இளைஞர்  கிணற்றில் சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை!

 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே நேர்முகத்தேர்வுக்கு சென்றபோது மாயமான இளைஞர், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு அடுத்த புங்கறை பகுதியை சேர்ந்தவர் லவன் - புவனேஸ்வரி தம்பதியினர். இவர்களது மகன் பிரதீப் (30). இவர் நாகர்கோவிலில் உள்ள ஜவுளி கடையில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், பிரதீப்புக்கு, திக்கணங்கோட்டை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி அஞ்சுகிராமத்திற்கு நேர்முக தேர்வுக்கு செல்வதாக கூறிவிட்டு முருகன் தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார். அதன் பின்னர், அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். எனினும் அவர் கிடைக்கவில்லை. இதனை அடுத்து, உறவினர்கள் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பிரதீப்பை தேடி வந்தனர்.இந்த நிலையில், நேற்று காலை புங்கறை அருகே 4 வழிச்சாலை பகுதியில் உள்ள கிணற்றில் பிரதீப் சடலமாக மிதந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள்,  தக்கலை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும்  தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, பிரதீப் தற்கொலை செய்து கொண்டாரா?  அல்லது கொலை செய்து உடல் கிணற்றில் வீசப்பட்டதா? என பல்வறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.