×

கோவை அருகே கழிப்பிடச்சுவர் மீது பைக் மோதல்... 2 இளைஞர்கள் பலி!

 

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் பொதுக் கழிப்பிடச் சுவர் மீது மோதியதில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணசாமி(21), ஸ்ரீஜித்(25). இவர்கள் கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள விடுதியில் தங்கி அருகில் உள்ள தனியார் மில்லில் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில், நேற்று  கிருஷ்ணசாமி, ஸ்ரீஜித் மற்றும் அவர்களது நண்பரான அன்னூரை சேர்ந்த லூர்து சகாயராஜ் ஆகிய 3 பேரும், அன்னூர் - சத்தியமங்கலம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

சத்தியமங்கலம் சாலையில் உப்புத்தோட்டம் கட் ரோடு அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் இருந்த பொதுக்கழிப்பிட சுவர் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் கிருஷ்ணசாமி, ஸ்ரீஜித், லூர்து சகாயராஜ் மற்றும் கழிப்பறையில் இருந்த லட்சுமி (60) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால்,  வழியிலேயே கிருஷ்ணசாமி, ஸ்ரீஜித் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த அன்னூர் போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.