×

தொடர்ந்து 5-வது ஆண்டாக பவானிசாகர் அணை 101 அடியை எட்டியது... கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

 

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 5-வது ஆண்டாக 101 அடியை எட்டியுள்ளது. இதனால் பவானி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்கி வருகிறது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் கடந்த 1 மாத காலத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் பவானிசாகர் அணை 100 அடியை எட்டியது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,634 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 101.15 அடியாக உள்ளது. அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்காக 500 கனஅடியும், பவானி ஆற்றில் 100 கனஅடியும், கீழ் பவானி வாய்க்காலில் 5 கனஅடியும் என மொத்தம் 605 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 5-வது ஆண்டாக அணை 101 அடியை எட்டியுள்ளது.

பொதுப்பணித்துறை விதியின் படி அணையில் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 102 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம். தற்போது நீர்மட்டம் 101 அடியை கடந்துள்ளதால் இன்னும் ஒரு சில நாட்களில் 102 அடியை எட்டிவிடும் என கருதப்படுகிறது. இதனால் பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனியே, நாளை ஆடி 18 விழாவையொட்டி பவானிசாகர் அணையின் மேல் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.