×

ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர்கள்... சேலத்தில் பரபரப்பு!

 

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை கோரி, சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு 6 ஆட்டோ ஓட்டுநர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருபவர்கள் அசோக், நாராயணன், பிரபு, வேல்முருகன், இளங்கோவன், மணிகண்டன். இவர்கள் நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது, திடீரென தாங்கள் பாட்டிலில் கொண்டுவந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், விரைந்து செயல்பட்டு அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். 

தொடர்ந்து, 6 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த 25 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வரும் தங்களிடம், ஏடிசி டிப்போ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆட்டோ ஓட்ட மாதம் ரூ.10 ஆயிரம் தர வேண்டுமென சுந்தரம், அர்த்தநாரி, ராஜி உள்ளிட்ட 4 பேர் மிரட்டுவதாக தெரிவித்தனர். பணம் தராவிட்டால், ஆட்டோவில் வரும் வாடிக்கையாளரை கீழே இறக்கிவிட்டு மிரட்டி வருவதாக கூறிய ஆட்டோ ஓட்டுநர்கள், தட்டிக்கேட்பவர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்தனர். 

இதுகுறித்து பள்ளபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் வேதனையில்  ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சித்ததாக கூறினர். இதனை அடுத்து, போலீசார் ஆட்டோ ஓட்டுநர்கள் 6 பேரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆட்டோ ஓட்டுநர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் காரணமாக சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.