×

கிருஷ்ணகிரி அருக அனுமதியின்றி கிரானைட் கல் கடத்திய நபர் கைது!

 

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உரிய அனுமதியின்றி லாரியில் கிரானைட் கல்லை கடத்திச்சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அடுத்த தாசரிப்பள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கனிம வளத்துறை அதிகாரி பொன்னுசாமி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கிரானைட் கற்களை ஏற்றி வந்த கனரக லாரியை அதிகாரிகள் நிறுத்தி, ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தமிழக அரசின் அனுமதியின்றி முறைகேடாக லாரியில் கிரானைட் கல்லை கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து, லாரி ஓட்டுநர் ஜெய சாம்ராஜ்குமார் (45) என்பவரை கனிமவளத்துறை அதிகாரிகள் பிடித்து கந்திகுப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், கிரானைட் கல் கடத்திய லாரியையும் கைப்பற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் ஜெயசாம்ராஜ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய கமலநாதன் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.