×

கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் அன்னாபிஷேகம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

 

ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, அரியலுர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற அன்னாபிஷேகம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் சிவ பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதனையொட்டி, அரியலுர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவிலில் 100 மூட்டைகளில் இருந்த 2,500 கிலோ பச்ச அரிசியை  பயன்படுத்தி சாதம் வடிக்கப்பட்டது. பின்னர் சுமார் 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்ட ஒரே கல்லினாலான ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவலிங்கத்திற்கு அரிசி சாதம் சாத்தப்பட்டது. 


தொடர்ந்து, மாலை 6 மணி அளவில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரியலுர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.  இதனை தொடர்ந்து, இரவு 8 மணியளவில் சுவாமிக்கு சாத்தப்பட்ட சாதம் பக்தர்களுக்கும், பொதுமக்களும் பிரசாதமாக வழங்கப்பட்டது. எஞ்சிய சாதம் குளங்கள், ஏரிகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் உள்ள மீன்களுக்கு உணவாக வழங்கப்படும்.