×

3 தலைமுறைகளுக்கு பின் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்த பட்டியலின மக்கள்!

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் பட்டியலின மக்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வரதராஜ பெருமாள் கோயிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள எடுத்த வாய்நத்தம் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் தரிசனம் செய்ய, ஆதிக்க சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி கோரி, அப்பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, வருவாய் துறையினர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், எடுத்த வாய்நத்தம் கிராமத்தை பட்டியலின மக்கள் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய, மாவட்ட  இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அனுமதி வழங்கினார். இதனை அடுத்து, நேற்று பட்டியலின மக்கள், வரதராஜ பெருமாள் கோயிலில் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி, கள்ளக்குறிச்சி டிஐஜி பகலவன், விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் கள்ளக்குறிச்சி ஆர்டிஓ செல்வி பவித்ரா, வட்டாட்சியர் இந்திரா தலைமையிலான வருவாய் துறையினர் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பட்டியலின மக்கள், தங்களது வீடுகளில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக வரதராஜா பெருமாள் கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து, கோவிலில் பக்தி பரவசத்துடன் வரதராஜ பெருமாளுக்கு பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.  3 தலைமுறைகளுககு பிறகு பட்டியலின மக்கள் கோவிலுக்குள்  சென்று வழிபாடு நடத்திய சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.